(நபியே!) நியாயத் தீர்ப்பை பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? (பின்னர்) அவன்தான் அனாதைகளை விரட்டுகின்றான். (அல்குர்ஆன்: 107:1,2)
ஸஹ்ல் பின் ஸஃத் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் 'நானும் அனாதைகளைப் பராமரிப்பவரும் சுவனத்தில் இவ்வாறு இருப்போம். எனக் கூறி தனது சுட்டு விரலையும் நடு விரலையும் நபி (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். பின்பு சேர்த்துக் கொண்டார்கள்.' (நூல்: புஹாரி, முஸ்லிம்)
அனாதைகளை பராமரிப்பதும் அவர்களது காரியங்களில் நாம் அதிக கவனம் செலுத்தவேண்டியதும் எமது மார்க்கத்தில் வழியுறுத்தப்பட்ட கடமைகளில் ஒன்றாகும் என்பதை மேற்குறிப்பிட்ட அல்குர்ஆன், அல்ஹதீஸ் எமக்கு தெளிவுபடுத்துகின்றது. ஆனால் இவ்வாறான கட்டளைகளை எம்மில் பலர் அறிவதில்லை. மார்க்கத்தில் ஏனைய கடமைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் ஆர்வமும் அனாதைகள் விடயத்தில் போதியளவு செலுத்தப்படவில்லை என்றே கூற வேண்டும். அனாதைகளை சமூகத்தின் சிறந்த பிரஜைகளாக உருவாக்க வேண்டும், அவர்களும் தூய இஸ்லாத்தின் பாதையில் செயற்படவேண்டும் எனும் உயரிய நோக்கில் 2004ம் ஆண்டு காலப்பகுதியில் எமது நிலையத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்ட அனாதைகள் பராமரிப்பு நிதியம் அல்லாஹ்வின் மிகப் பெரும் உதவியினால் இன்றுவரை மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது. ஆரம்பமாக சுமார் 22 சிறார்களுடன் ஆரம்பமான இந்நிதியம் இன்று 104 சிறார்களைக் கொண்டுள்ளது.
சிறார்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, கல்வி போன்றவற்றுக்காக மாதாந்தம் கனிசமான தொகையினை இலங்கை ஜம்இய்யதுல் தாருல் பிர் நிறுவனம் தொடராக வழங்கி வருகின்றது. 12 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான நிதியுதவிகள் தொடராக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இவர்களின் எதிர்கால கல்வி மற்றும் அவசர வைத்திய தேவைகளைக் கருத்திற் கொண்டு அவர்களுக்கான கொடுப்பனவில்; குறிப்பிட்ட சிறு தொகையினை அமானா முதலீட்டு நிறுவனத்தில் சிறுவர் சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடப்படுகின்றன.
அன்புள்ளம் கொண்ட தனவந்தர்களே! சகோதரர்களே!!
தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் அல்லது பாதுகாவலர்களின் பொறுப்பில் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் அனாதைச் சிறார்கள் எமது சமூகத்தில் ஏராளம் ஏராளம். இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்து செயற்படும் சகோதரர்கள், செல்வந்தர்கள் இவ்வாறான அனாதைகளை பாராமரிக்கின்ற விடயத்தில் மிக மிக அதிகமான பங்களிப்பை வழங்க கடமைப்பட்டுள்ளனர். அல்லாஹ்வின் கட்டளையையும், நபி (ஸல்) அவர்களது ஸுன்னாவையும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற நன்நோக்கில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து இங்குள்ள அனாதைச் சிறார்களை தங்களது சொந்தப்பிள்ளைகளைப் போன்று பராமரிக்க முன்வருகின்ற அந்த அறாபிய மக்களின் முன்னுதாரணத்தைக் கண்டாவது எமது அருகிலுள்ள அனாதைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா? இந்தச் சிறார்களை பாரமரிப்பது அறபுகளின் கடமை மட்டும்தானா? ஏன் அக்கடமை எமக்கில்லையா??
அன்புச் சகோதரர்களே! தனவந்தர்களே!!
வீட்டிலுள்ள உங்கள் ஒரு குழந்தைகளுக்கு ஆடை, உணவு, கல்வி மற்றும் மருத்துவம் என்று நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள்? உங்கள் குழந்தைக்காக நீங்கள் செய்கின்ற செலவில் பாதியை வழங்கினால் கூட ஓர் அனாதைக் குழந்தை சந்தோசம் அடையும் அல்லவா! ஏன் அந்த நன்மையை அடைந்து கொள்ள நீங்கள் முயற்;சிக்கக் கூடாது? நாளை நீங்கள் மரணித்து விட்டால் உங்கள் குழந்தைகளும் சமூகத்தில் அனாதைகளே என்பதை மனதில் நிறுத்தி செயற்படுங்கள். ஒருவேளை உணவிற்கே திண்டாடும் இச்சிறார்களின் நிலையை சற்று சிந்தியுங்கள்!! இவ்வாறான 300க்கும் மேற்பட்ட சிறார்களின் தகவல்கள் எம்மிடம் உள்ளது. இவர்களில் ஒருவரையாவது நீங்கள் பொறுப்பேற்று பராமரிக்க முன்வாருங்கள். நீங்கள் எம்மைத் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பத்தில் அவர்கள் பற்றிய முழு விபரங்களையும் வழங்கத் தயாராகவுள்ளோம்.
தொடர்புகளுக்கு
|