ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் ஆரம்ப தொழுகை நிகழ்வு

புகைப்படம்: சத்தியக்குரல் ஓக்டோபர் 2005

   காத்தான்குடி மண்ணில் அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் எழுச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்த வேளையில்தான் ஏகத்துவக் கொள்கையை தம் வாழ்வில் முழுமையாக பின்பற்றி வாழ வேண்டும் என்ற சிந்தனை மக்களின் உள்ளங்களில் துளிர்விட ஆரம்பித்தது. அல்குர்ஆனையும், நபிகளாரின் போதனைகளையும் சீராக விளங்கிக் கொண்டவர்கள் அதனை தமது வாழ்வில் முழுமையாக கடைப்பிடிக்க முயற்சிப்பதை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. இவ்வாறு முழுமையான இஸ்லாத்தைப் பின்பற்ற நினைக்கின்ற மக்களை ஒன்று திரட்டுவதும் அவர்களுக்கு அவ்வப்போது தேவைப்படுகின்ற மார்க்க விளக்கங்களை வழங்குவதும் இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் பிரச்சாரம் செய்வதற்காக தோற்றுவிக்கப்பட்ட இஸ்லாமிய தஃவா அமைப்புக்களின் தலையாய பொறுப்பாகும்.

அவ்வாறானதொரு மிகப் பாரிய பொறுப்பைச் சுமந்த நிலையில்தான் எமது நிலையம் 2004ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டுவதற்காகப் மிகவும் பாடுபட்ட ஓர் சகோதரரின் இல்லத்தில் சுமார் 15 சகோதரர்களைக் கொண்டு தனியானதொரு ஜும்ஆ தொழுகை ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னர் மற்றுமொரு சகோதரரின் இல்லத்திற்கு மாற்றப்பட்டு மிக நீண்ட நாட்களாக அங்கேயே தொழுகை இடம் பெற்று வந்தது. மிகவும் தியாக சிந்தையுடன் தங்கள் வீடுகளை தொழுகைக்காக தந்துதவிய அந்த சகோதரர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! அவர்கள் அன்று செய்த தியாகமே இன்று தௌஹீதைப் தெளிவாகப் பேசக்கூடியதொரு ஜும்ஆப் பள்ளிவாயல் அமைவதற்கு உறுதுனையாக அமைந்தது என்றால் அதை எவராலும் மறுக்க முடியாது.

அதைத் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்த மக்கள் வெள்ளத்தினால் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கானதொரு தனியான காணியை வாங்குவதற்கான முயற்சியில் நிருவாகம் இறங்கியது. நிலைய நிருவாகிகளின் உதவியைக் கொண்டே இக்காணி வாங்கப்பட வேண்டும் எனும் தூய சிந்தனையில் அவர்களது தாராள நன்கொடையாகப் பெறப்பட்ட ரூபாய் 350000.00 (மூன்றரை இலட்சம்)தைக் கொண்டு காணி வாங்கப்பட்டு அக்காணி துப்பரவு செய்யப்பட்டு தற்காலிகமாக விரிப்புக்கள் மேலே கட்டப்பட்ட நிலையிலேயே தொழுகை ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

நாளுக்கு நாள் அதிகரித்த ஏகத்துவக் கொள்கைச் சகோதரர்களின் வருகை மற்றும் தௌஹீதை விளங்கிக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வத்தில் வருகை தரும் சாதாரண மக்கள் வெள்ளத்தை சமாளிப்பதற்காக மேலதிகமாக மீண்டுமொரு காணி ரூபாய் 600000.00 (ஆறு இலட்சம்)த்திற்கு பெறப்பட்டு பள்ளிவாயல் விரிவு படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் திரண்ட மக்கள் வெள்ளத்தை சமாளிப்பதற்காக ரூபாய் 900000.00 (ஒன்பது இலட்சம்)த்திற்கு மேலும் இரு காணிகள் பெறப்பட்டு தற்போது பள்ளிவாயல் அமைந்துள்ள அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தொடராக இவ்வாறு காணிகள் வாங்கப்பட்ட வகையில் இன்றுவரை (25.08.2009) சுமார் 1,000,000.00 (பத்து இலட்சம்) கடன் செலுத்தப்படவுள்ளது.

தௌஹீத் பிரச்சாரத்தை அதன் தூய்மையான வடிவில் முன்னெடுத்துச் செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளிவாயல் ஆரம்ப காலம் தொட்டு பல்வேறு சவால்களை எதிர்நோக்கியே வந்துள்ளது. அவைகள் பற்றி விவரிப்பது எமது நோக்கமல்ல. இருந்தபோதிலும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவில் நடைபெற்ற பல கலந்துரையாடல்கள் மிகவும் சிநேக பூர்வமாக நடைபெற்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் நாடி எழுப்பப்பட்ட இப்பள்ளிவாயலை எல்லாம் வல்ல அல்லாஹ் இன்றுவரை பாதுகாத்துவருகிறான். அல்ஹம்துலில்லாஹ்.

இப்பள்ளிவாயலுக்கான காணி மற்றும் அதில் தற்காலிக குடிசை அமைப்பதற்கான நிதியினை நிலைய நிருவாகிகளிடமிருந்தும், கொள்கைச் சகோதரர்களிடம் இருந்தும் நன்கொடை மற்றும் கடனாகப் பெறப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அதிகரித்து வரும் மக்கள் வெள்ளத்தினை கருத்திற் கொண்டு மூன்று மாடிகளைக் கொண்ட பள்ளிவாயல் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கு நிருவாகம் உத்தேசித்துள்ளது. அதற்காக ரூபாய் நாற்பது மில்லியன் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலுக்கான வரைபடம்:

பள்ளிவாயல் முகப்புத் தோற்றம்
கீழ் மாடி
1வது மாடி
2வது மாடி
3வது மாடி
 

இப்பள்ளிவாயல் நிர்மாணிப்பதற்கு தேவைப்படும் 40 மில்லியன் ரூபாயினை திரட்டுவதற்கு ஆர்வம் கொண்ட சகோதரர்களிடமிருந்து ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

இப்பள்ளிவாயலினூடாக தற்போது நடைபெற்று வரும் பணிகள்:

01. அல்குர்ஆன், அஸ்ஸுன்னா வழிமுறையிலான ஐவேளை மற்றும் ஜும்ஆ தொழுகை.
02. சிறார்களுக்கான நவீன கற்பித்தல் முறையிலான அல்குர்ஆன் மத்ரஸா.
03. அனாதைச் சிறார்களுக்கான கல்விக் கூடம்.
04. மாணவர்களுக்கான வகுப்புக்கள்.
05. பெண்களுக்கான அல்குர்ஆன் பயிற்சி வகுப்புக்கள்.
06. பெண்களுக்கான நவீன கற்பித்தல் முறையிலான கல்வி நிலையம்.
07. வளர்ந்தோருக்கான மார்க்க விளக்க வகுப்புக்கள் மற்றும் தர்பிய்யா.
08. இஸ்லாமிய நூலகம்.

இவ்வாறான மேலும் மக்கள் நலன் பேணும் பல்வேறு சமூகநல சேவைகள் இப்பள்ளிவாயலினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
எனவே இப்பள்ளிவாயலின் வளர்ச்சிப் பணிக்கு உங்கள் ஒவ்வொருவருடைய ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் இப்பள்ளிவாயல் நிருவாகம் எதிர்பார்க்கின்றது.

-அன்புடன்-
நிருவாகம்
ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயல்
புதிய காத்தான்குடி-06